செவ்வாய், 28 ஜனவரி, 2014

நினைவு நாடாக்கள்

மறக்கும் வியாதி மனிதனுக்கு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கு, நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா என்ற கண்ணதாசன் வரிகள் கூட சூழ்நிலைக்கு ஏற்ப மறந்து போகும். ஆனால் எனக்கு இப்போது அந்த பாடல் வரி உல்ட்டாவாக இருக்கு, மறக்க தெரிந்த மனமே உனக்கு நினைக்க தெரியாதா என்று, எனது பால்ய நினைவுகள் எனை தட்டி கொண்டே இருக்கு.

ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்புவரை என்னுடன் பயின்ற நண்பர்களை சுத்தாமாய் எனக்கு நினைவில்லை நேற்று பழைய புகைபடங்களை பார்ப்பதற்கு முன் வரை

சேவியரும் ரீகனும் ஒரு டீம், நான், கோபி அப்புறம் கிரகோரி ஒரு டீம் என சண்டையிட்டு கொண்டது நினைவிருக்கு ஆனால் முகம் நினைவில்லை, கைகளில் புகைபடம் இருந்தும் இவர்களின் பெயரும் குட்டி குட்டி நிகழ்வுகள் மாத்திரமே நினைவிருக்கு, அதிலும் கோபி எனக்கு நெருங்கிய நண்பன், அவனது ஊர் கூட எனக்கு நினைவிருக்கு போளூர் பக்கத்தில் நரசிங்கபுரம். ஆனால் அவன் முகம் மட்டும் என் நினைவுக்கு வரவேயில்லை, லீவு முடிஞ்சி ஹாஸ்டல்ல வந்து, தத்தம் அப்பாக்கள் பிள்ளைகளை வந்து விடும்போது ஒரே ரகளையாய் இருக்கும், இழவு வீடு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாங்கள் அழுது கொண்டிருப்போம். பெரிய கேட்டை இழுத்து சார்த்திடுவார்கள், நான் ஒரு மூலையில் அழுது கொண்டிருப்பேன், கோபி ஒரு மூலையில் அழுது கொண்டிருப்பான். இப்படி கொஞ்ச நாளாக அழுது அழுதே நண்பர்களானவர்கள் நாங்கள்  இவனை எப்படி மறந்தேன் இவன் முகம் எப்படி எனக்கு மறந்து போனது ஆச்சிரியமாதான் இருக்கு

அடக்கடவுளே மனிதனுக்கு எவ்ளோ பெரிய வியாதி இந்த மறக்கும் வியாதி, அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேறொரு ஹாஸ்டல் புது இடம் புது நண்பர்கள் இப்போது அழுகை கிடையாது ஒன்லி ஹாய், பத்தாம் வகுப்பு வரை படித்த நண்பர்களின் முகம் ஓரளவுக்கு நினைவிருக்கு, பிரியாவிடையின் போது எடுத்து கொண்ட புகைபடங்களை பார்த்ததும் நண்பர்களின் முகம் அவ்வளவாக ஒட்டவில்லை என்றாலும், புகைபட அடிக்குறிப்பில் நண்பர்களின் பெயரை அச்சிட்டிருப்பதால் ஓரளவுக்கு நினைவிருக்கு. இங்கு எனக்கு நெருங்கிய நண்பன் அகிலன்தான், செமையா கதை சொல்லுவான் அதிலும் கதைக்கு இடையிடையே குட்டியா காமெடியும் செய்வான் இவன் ஊர் பாப்பாரபட்டிக்கு அருகில் ஏதோ ஒரு ஊர் சொன்னது நினைவில் இல்லை இவன் பேச்சு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அரூர் வட்டார மொழி எங்களை இவன் த்ரி வாடி போடி ந்னு பெண்பால் வைத்து தான் கூப்புடுவான் அதே போல் அங்க இங்க என்று சொல்வதற்கு பதில் அவத்த இவத்த ந்னு தான் சொல்லுவான், அப்போது நான் கொஞ்சம் புஷ்டியா இருந்ததால இவன் எனக்கு வைத்த பெயர் பீமன் அப்போது பட்ட பெயர் வைப்பது சகஜம் எல்லாருக்குமே ஒவ்வொரு பெயர் இருக்கும் நாங்க அவனை பொண்ணுன்னு கூப்பிடுவோம் அது ஏன்னு எனக்கு தெரியல ஒருவேளை ரொம்ப அழகா இருக்கறதால அப்டி கூப்ட்டமா இல்ல த்ரி வாடி போடின்னு கூப்புட்டதாலையா தெரியல

எனக்கு அகிலன் நெருங்கிய நண்பன் அதே போல பாண்டித்துரைக்கி நான் தான் உயிர் நண்பன் இவனது ஊர் திருப்பத்தூர் அருகில் பள்ளத்தூர் இவனது கையெழுத்து சரியில்ல அப்டிங்கரதுக்காகவே நான் தான் இவனுக்கு ரெக்கார்டுநோட்டு, லட்டர் எல்லாம் எழுதி கொடுப்பேன். இன்னும் சொல்ல போனால் நான் எழுதும் ஸ்டெய்ல்லியே இவனும் எழுதி எழுதி பழகி கொண்டான். சில நேரங்களில் எனது கையெழுத்தும் இவனது கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். வாத்தியாரும் பல நேரம் குழம்பி போனதுண்டு இவன் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல திருக்குறளுக்கு அருஞ்சொற்பதம் சொல்ல தெரியாமல் தமிழையாவிடம் என்னை மாட்டிவிடுவது அறிவியல் ஆசிரியையிடம் ரெண்டு பேரும் ஒரே ஹோம் வொர்க் நோட்டை காட்டி முழிச்சமார கள்ளன் என்று எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது எல்லாமே இவனையே சாரும், இதுவரை முழிச்சமாற கள்ளனுக்கு அர்த்தம் எனக்கு தெரியாது

அடுத்து 11,12ம் வகுப்பு வேற ஹாஸ்டல் அப்பாடா இப்போது பழைய நண்பர்கள் சிலரும் என்னோடு அவர்களை நண்பர்கள் என்று சொல்ல முடியாது ஜஸ்ட் தெரியும் அவ்ளோ தான் பிறகு நன்றாய் பழகிகொண்டோம் இதில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் பார்த்தசாரதி ,சங்கர் எப்போதும் ஒன்றாகவே சுத்துவோம் நாங்க மூனு பேருமே ஸ்கூலுக்கு லேட்டா போவோம் திட்டுவாங்குவோம் ஒருத்த ஹோம்வொர்க் பண்ணலன்னா யாருமே பண்ணமாட்டோம் அப்படி திரிந்தோம் கல்விசுற்றுலாவுக்கு பணம் வாங்க பல பொய்களை வீட்டில் சேர்ந்தே சொல்லிருக்கோம்(அந்த பீஸூ இந்த பீஸ்ன்னு) அதிலும் பார்த்தசாரதி மேல் எனக்கு தனி பிரியம் உண்டு உதவும் மனப்பாங்கு அதிகம் அவனுக்கு அதனாலேயே அவன் மீது தனி பிரியம். எனது மாற்று சான்றிதழ் (டிசி) வாங்குவதற்கு எங்க அப்பா வரவில்லை, கார்டியன் கையெழுத்து போட்டு வாங்கி தந்தது இவங்க அப்பா தான் இவன் முகத்தை என்னால் மறக்கவே முடியாது ஏன்னா அடையாளம் அப்படி மாடு முட்டி கன்னத்தில் பெரிய ஒரு ரூபா சைசுக்கு அடையாளம் இருக்கும், அதனாலேயே இவனுக்கு கிஸ்ன்னு பட்ட பெயரும் உண்டு. 3ம் தேதி ஹாஸ்டல் ரீ ஓப்பன் என்றால் நாங்கள் 2ம் தேதியே ஆஜர் ஆகிடுவோம் போளூரில், எதுக்கு எல்லாம் படம் பாக்க தான்.
இப்போது இதில் எந்த நட்பும் எனது தொடர்பில் இல்லை எல்லாம் மறந்தாகிவிட்டது



பின் சென்னை தரமணியில் தொடர்ந்த எனது படிப்பு வாழ்வில் மீண்டும் புது புது நண்பர்கள் இதோ இன்னும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கு சிலரை தவிர, காலேஜ் ரூம் கதவ சாத்திட்டு நிலவு பாட்டு நிலவு பாட்டுன்னு விசய் மாதிரி எங்களுக்குள்ளே டூயட் பாடுனது, சங்கீதா இன்னொருத்தி சரோஜா ரெண்டுல எந்த ஃபிகரு நல்ல ஃபிகருன்னு சொல்லேண்டான்னு கானா பாடுனது, காலேஜ் கட் அடிச்சிட்டு பாபா படம் பாத்தது, நீலங்கரை பீச்ல சுண்டகஞ்சி சாப்ட்டது, காலேஜ்க்கு போகாம ஃபிலிம் சிட்டி வாசல்லையே உக்காந்து கெடக்கரது, ஓ போடு பாட்டுக்கு தெருவுல நின்னு டான்ஸ் ஆடுனது, என எல்லா நினைவசைவுகளோடும் இதோ மீதமிருந்த நட்புகளோடு பயணிக்கிறேன், முகநூலிலும் தொடருது அந்த நட்பு ராகவேந்தர் ஜெயராஜின்னு …..
இப்போது சமீபமாக முகநூல் நட்பு, தொழில் நட்பு, என இன்னும் நட்பு படை பெருகிகொண்டு தான் இருக்கு. புது நட்பு பெருக பெருக பழைய நட்பு மறந்து கொண்டே போகுது இன்னும் கொற காலத்துல எத்தனை நட்பு உள்ள வர போகுதோ எத்தனை நட்பு வெளியில போக போகுதோ இந்த மனிதனுக்கே உண்டான மறக்கும் வியாதியால்